உ ங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு பெண்ணை கொன்றுவிட்டீர்களே – சென்னை பேனர் வழக்கில் நீதிபதி கண்டனம்

 சென்னை.அக்டோபர்.15

சுபஸ்ரீ வழக்கில் ஜாமின் கோரிய ஜெய்கோபாலுக்கு  சென்னை உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த  பேனர்கள் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண்  நிலை தடுமாறி விழுந்தார்,அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெய்கோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டிர்கள் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் இவ்வளவு நாட்கள் ஏன் நீங்கள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்கோபால் தரப்பில், விபத்து நடந்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஜெய்கோபால் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்ததினால் உடனடியாக காவல்துறையிடம் சரணடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் ஜெய்கோபால் ஜாமின் மனு மீது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *