பாரம்பரியமே நம் முழுகவசம் – அமைச்சர் S.P.வேலுமணியின் டிஜிட்டல் பிரச்சாரம்!
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்க்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரம்!
சென்னை, செப்-2

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் ஊரடங்கு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும்,கொரோனா என்ற உயிர்க்கொல்லி இந்த மண்ணை விட்டு இன்னும் அழியவில்லை.தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தவரை மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றியது போல,ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்திவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது,சமூகவிலகலை கடைபிடிப்பது,அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலும், நோய் தொற்றை தடுக்க அத்தியாவசியமான நோய்எதிர்ப்பு சக்திமிக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்க்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரம் தொடங்கியுள்ளார். அவசியம்,அத்தியாவசியம் என்ற முழக்கத்துடன் பாரம்பரியமே நம் முழுகவசம் என்பதை வலியுறுத்தி தமது சமூக ஊடகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலரின் வாக்கு பொய்க்குமா? நம் பாரம்பரியம் காட்டிய வழியில், உடல் நலம் பேணி ஆரோக்கியம் பெறுவோம். உணவே மருந்து என உணர்ந்து நடப்போம் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
மக்கள் அன்றாட வாழ்வில், மருத்துவ குணங்கள் அடங்கிய வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பது, மஞ்சள் பொடியை வெது வெதுப்பான தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடிப்பது, காலையில் இஞ்சிச் சாறு குடிப்பது, எலுமிச்சை சாறு, மிளகு,நெல்லிக்காய்,பூண்டு ஆகிய நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய மருத்துவமுறைகளே நம்மை காக்கும் முதல் கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிஜிட்டல் பிரச்சாரம் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவும் முன்பே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தமது துறை வழியாகவும், தனிப்பட்டமுறையிலும்,கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை கடந்த மார்ச் மாதம் முதல், தமது ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம், இணையதளம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது சமூகவலைதள கணக்குப்பக்கங்களின் முகப்புபகுதியில் முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படத்தை பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.