இ.எம்.ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும்..உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, செப்-1

கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது வாடிக்கையாளா்களின் இன்னலை கருத்தில் கொண்டு, அவா்களிடம் கடன் தவணைகள் வசூலிக்கப்படுவதை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியது.அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கடன் தவணைகள் வசூலிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை வசூலிக்கும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டன.

கடன் தவணைகளில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, கடனுக்கான தவணைகளை செலுத்துவதில் இருந்து 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் அளிக்க முடியும் என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், கடன் தவணைக்கு கால அவகாசம் மற்றும் வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *