தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த இரட்டையர்களுக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..!

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த இரட்டையர்கள், பாலகுமார் & பாலசந்தர் ஆகிய இருவருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர்-1

மதுரை மாவட்டம் மேலூர் வஞ்சிநகரம் கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பாலசந்தர், பாலகுமார் ஆகியோர் மேலூர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் ஆம்புலன்ஸ்கள் வாகன நெரிசல்களில் சிக்காமல் விரைவாக செல்லும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தினர். இதற்கு காரணம், இவர்களுடைய தந்தை விபத்தால் உயிருக்கு போராடிய போது ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்தார். தந்தை இறந்த தாக்கமாகவே இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

உயிருக்கு போராடுபவர்களை ஏற்றி, ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், சிக்னலுக்கு, 2 கி.மீ., துாரம் முன், அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., வந்து விடும். இதையடுத்து, ‘சர்க்யூட் போர்டு’ தானாக இயங்க ஆரம்பித்து, சாலையோர சிக்னல் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், ‘ஆம்புலன்ஸ் வருகிறது; வழி விடுங்கள்’ என தெரிவிப்பதோடு, ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.சிக்னலை ஆம்புலன்ஸ் கடந்ததும், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., சென்று, ஒலிபரப்பு துண்டிக்கப்படும்

இந்த செய்தி வெளியான நிலையில் தமிழக முதலமைச்சர் இரட்டையர்களான இம்மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இரட்டையர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில் “தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்களின் செய்தியறிந்து மகிழ்வுற்றதாகவும், தமிழக முதல்வர் தலைமையிலான அம்மா அரசுற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் திறமையை வெளிபடுத்திய மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தும், இளம் விஞ்ஞானிகளின் சாதனை தொடர வாழ்த்துவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *