மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத 69490 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத, சுமார் 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, ஆக-31

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மற்ற இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “சென்னையில் 1,62,284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது. இதுவரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காக 69490 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீரி சேகரிப்பு கட்டமைப்பில் சிறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டிய 38507 கட்டிடங்களில், ஒரு வாரத்திற்குள் மழைநீர் சேகரிப்பை அமைத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் ஆணையர் தெரிவித்தார்.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 238 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிணறுகளை புனரமைக்கும் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இதுவரை 339 இடங்களில் உரைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *