மருத்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடம்.. மு.க.ஸ்டாலின்

“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜக அரசுக்கு மிகச்சிறந்த பாடம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-31

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ;-

“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். ஏழை – எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவும் கொண்டு வந்த சலுகையிலும் இந்திய மருத்துவக் கவுன்சில் அநியாயமாகக் குறுக்கிட்டு – அந்தச் சலுகைகளை ரத்து செய்து – அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற சுகாதாரத்திற்கும் பேரிடரை ஏற்படுத்தியது.

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மற்றோர் அங்கமாகவே முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளைப் பறித்து – கடந்த இரு ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களையும் – சட்டப் போராட்டத்தையும் நடத்திட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி – நோய் நொடியின்றி கிராமப்புற மக்களைப் பாதுகாத்திட வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

மாநில உரிமைகளில் கண்மூடித்தனமாகக் குறுக்கிடக் கூடாது என்று இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலையில் உச்சநீதிமன்றம் வைத்துள்ள குட்டு – கூட்டாட்சித் தத்துவத்தையும் – மாநில உரிமைகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்தும் மிகச்சிறந்த பாடம் என்றே நான் கருதுகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில உரிமைக்கும் – சமூகநீதிக்குமான இந்தத் தீர்ப்பை அளித்த மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்விற்கு எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *