பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தேனி, ஆகஸ்ட்-31

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே கேரள மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன்காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்காக 900 கன அடி வீதம், 45 நாள்களுக்கும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு 6,739 மி.ககனஅடி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *