செப்.1 முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து.. விதிமுறைகள் அறிவிப்பு..!!
செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் சென்னை பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் செயல்படும்.
சென்னை, ஆகஸ்ட்-30

கொரோனா தொற்று காரணமாக பேருந்து மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்படும் என அறிவித்துள்ளது.
தற்போது வரை அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புறவு பணியாளர்களுக்கு மட்டும் பேருந்து சேவை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவைக்கான தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
மாவட்டத்திற்குள் அரசுப் பேருந்து சேவை செப்டப்மர் 1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வருவதற்கு அனுமதி.
தமிழகத்துக்குள் செப்.15 வரை பயணிகள் ரயிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.