பாஜக டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் வளராத கட்சிதான்.. அமைச்சர் செல்லூர் ராஜூ

பாஜக டெல்லிக்கே ராஜாவாக இருக்கலாம், ஆனாலும் தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை, ஆகஸ்ட்-29

மதுரை காமராஜர் சாலையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம். பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

அப்போது, தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர். பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிட கட்சியில் தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும். மேலும், மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை என்றும் மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, எம்ஜிஆர் போன்று நடிகர் விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள், விஜய் தமிழர், நல்ல நடிகர் அவ்வளவுதான், அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், அம்மா மீது ஈர்ப்பு உள்ளதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *