கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்

“தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்;
கேம்பஸ் இண்டர்வியூவில் வழங்கிய வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்த வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-29

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ;-

“இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்று 26.8.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் – ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.

பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை – எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர். கொரோனா பேரிடரின் இன்னலுக்கு உள்ளானதால், சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள் கூட பருவத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன.

“மாணவர்களிடமிருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை உடனே பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்ட போது கூட பல கல்லூரிகள், “மாணவர்கள் பெரும்பாலானோர் எங்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை. பிறகு எப்படி நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பின.
கல்லூரிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூட வழக்குகள் தொடரப்பட்டன.

ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், அதுபற்றி ஆலோசிக்காமல், தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார். பேரிடர் நெருக்கடியில் “தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை” முதலமைச்சர் திரு. பழனிசாமி கை கழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

“நீட் தேர்வு நடத்தக் கூடாது” என்று மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர மறுத்தது போல், ஏன் கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகளில் கூட மாநிலப் பேரிடர் ஆணையத்தைக் கூட்டி மகாராஷ்டிரா மாநில அரசு போல் தீர்மானம் நிறைவேற்றிட அஞ்சிய முதலமைச்சர், பருவத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களையும் கண்டுகொள்ளாமல் இப்படியொரு பாரபட்சமான முடிவினை எடுத்து அறிவித்திருக்கிறார். இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
ஆகவே, “கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றிப் பெற்றோர்களின் மனக்கவலை அதிகரித்துள்ள இந்தச் சூழலில், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகண்டு – உரிய முடிவுகளைக் காலதாமதமின்றி அறிவித்திட வேண்டும் என்றும், ஏற்கனவே இறுதியாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிறுவனங்கள் – அந்த வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக் கூடாது என்று அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *