பக்தர்கள் இன்றி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா இன்று(சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை, ஆகஸ்ட்-29

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கீழை நாடுகளின் ‘லூர்து ‘நகர் என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் பேராலய இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *