14 வயது மகளின் தலையை துண்டித்து ஆணவக்கொலை செய்த தந்தைக்கு 9 ஆண்டு சிறை
ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 14 வயது சிறுமியின் ஆணவக் கொலை வழக்கில், சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான், ஆகஸ்ட்-29

ஈரானில் கடந்த மே மாதம் ரோமினா அஷ்ரஃபி எனும் 14 வயதான சிறுமியின் காதலை ஏற்க மறுத்த அவரது தந்தை சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த ஆணவ கொலை தொடர்பாக ரோமினா அஷ்ரஃபியின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார். ரோமினாவின் படுகொலைக்கு நியாயம் கேட்டு பலரும் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் சிறுமியின் தந்தையான ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆணவக் கொலைக்கு இந்தத் தண்டனை குறைவு என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.