அடுத்த கட்ட தளர்வுகள் என்ன? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
ஊரடங்கில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, ஆகஸ்ட்-29

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொது முடக்கத்தால் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தளா்வுகளும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் செப்டம்பா் மாதத்தில் எத்தகைய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காணொலி வழியாக இன்று காலையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
இந்த கூட்டத்துக்குப் பின் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரையும் முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.