ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணியின் பிரபல வீரர் சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மும்பை, ஆகஸ்ட்-29

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

துபாய் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபாயில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நாள்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

சிஎஸ்கேவைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோனியைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரில் இருந்து ரெய்னா விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *