நெல்லை விவசாயிகளுக்கு மலிவு விலையில் இயற்கை உரம் ..மாநகராட்சியின் திட்டத்துக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..
சென்னை, ஆகஸ்ட்-28

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு அங்கு உள்ள நுண் உயிர் உர செயலாக்கும் மையங்களில் உரமாக தயாரிக்கப்படுகிறது. விளை நிலங்களுக்கு நல்ல மகசூலுக்கு வழி வகுக்கும் இந்த இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த உரத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நெல்லை மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்தை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டியுள்ளார்.இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, நுண் உயிர் உரங்களாக தயாரிக்கப்படுகின்றன. இந்த உரங்களை பயன்படுத்தி சாகுபடியாகும் காய்கறிகள், சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதோடு, இந்த இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இதில் வரும் வருமானம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாநகராட்சியால் வழங்கப்படுகிறது. நெல்லை மாநகராட்சியின் இத்தகைய ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு என் பாராட்டுகள் என அமைச்சர் எஸ்.பி.வேலு மணி குறிப்பிட்டுள்ளார்.