எம்.பி வசந்தகுமார் மறைவு.. தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-28

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ;-

ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய குமரி தொகுதி MP திரு.H.வசந்தகுமார் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு.திரு.H.வசந்தகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ;-

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. H. வசந்தகுமார் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனும் செய்தி அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. அன்னாரது பிரிவினால் மீளாத்துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தாருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் அனுதாபங்களையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ;-

கன்னியாகுமரி எம்பி எச் வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காங்கிரஸின் சித்தாந்தமான மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு எப்போதும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ;-

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச். வசந்தகுமார் அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரைத் தொலைபேசியில் அழைத்து உடல் நலம் விசாரித்தேன். ‘விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில்’ கரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

‘முயற்சி உடையான்; இகழ்ச்சி அடையான்’ என்பதற்கேற்ப, கடின உழைப்பு, சலியாத முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர். தொகுதி மக்கள் தன்னை எளிதில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பினைத் தவறாமல் ஏற்படுத்திக் கொடுத்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சென்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

‘வெற்றிக் கொடிகட்டு’, ‘வெற்றிப் படிக்கட்டு’ ஆகிய புத்தகங்களை எழுதிய அவர், இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு – ‘வசந்த் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைத் தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர்.

அரசியல் வேறு – மக்கள் பணி வேறு – வர்த்தகம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

விசிக தலைவர் திருமாவளவன்:-

தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த் குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர் எச்.வசந்தகுமார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றிவீரருக்கு எமது வீரவணக்கம்.

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்:-

எச். வசந்தகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இயற்கை எய்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது.சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன் விடா முயற்சியாலும், ஓய்வறியா கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர மக்கள் பயன் பெறும் விதத்தில் வசந்த் அண்ட் கோ எனும் நிறுவனத்தை தமிழகம் முழுவதும் ஓரு வர்த்தக சாம்ராஜ்யமாக உருவாக்கி உழைப்பில் உயர்ந்தவர். வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, எ.வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரிஅனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ;-

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் – அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி புரிந்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.எச்.வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அவர்கள், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தார்.

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்.வசந்தகுமார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை மனது நம்ப மறுக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது.

அருமை நண்பர் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார். வசந்தகுமாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும், பம்பரமாக சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைதியான பேச்சு, சிரித்த முகம் இவற்றிற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான வணிகர், அரசியல்வாதி வசந்தகுமார் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். வணிகத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என நிரூபித்தவர் என்றும் டி.டி.வி கூறியுள்ளார்.

எம்.பி வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார் எம்.பி மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்பு தமிழர் காலமாகிவிட்டார் என்று வைரமுத்து கூறியுள்ளார். வசந்தகுமார் உழைப்பு தேனீ, ஓயாக் கடல், அடித்தட்டு மக்களின் அன்பர். பூமிக்கு வந்துபோன வசந்தமாய் போய்விட்டார் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் வசந்தகுமார் எம்.பி என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற தீரா நல்லெண்ணம் கொண்ட அவரது மரணம் பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *