தங்க கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்கள் தீ விபத்தில் அழிந்ததா? – பினராயி விஜயன் விளக்கம்
கேரள தலைமைச் செயலக தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், ஆகஸ்ட்-28

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த 25ம் தேதி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.
இதனிடையே ஆளும்கட்சியினர் தீ விபத்து நாடகம் நடத்தி அதன் மூலம் தங்க கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சி செய்ததாக பாஜக மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீ விபத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பிரனாயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள தலைமை செயலக தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எதுவும் இழப்புக்கு உள்ளாகவில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தீ விபத்து தொடர்பாக ஏ.டி.ஜி.பி மனோஜ் ஆப்ரகாம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உள்ளது எனவும் முதல்வர் பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.