கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-28

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், யுஜிசி.யின் முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, கடந்த 18ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘ கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். ஆனால் கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக் கூடாது. தேர்வு நடத்த இயலாது என முடிவு செய்தால் யுஜிசியை மாநில அரசுகள் அணுகலாம். யுஜிசியை அணுகி தேர்வு நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரலாம். இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *