இந்திய பெண் உள்பட 5 பேருக்கு குடியுரிமை வழங்கிய அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய பெண் மென்பொறியாளர் உட்பட, ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், அமெரிக்க குடிமக்களாக, பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
வாஷிங்டன், ஆகஸ்ட்-27

இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது.இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் பங்கேற்றார்.
இவர்கள் ஐந்து பேரும், வரிசையாக நின்று, ஒரு கையில் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு, குடியுரிமைப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். குடியுரிமைக்கான சான்றிதழை, ஐந்து பேரிடமும், அதிபர் டிரம்ப் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:-
உங்கள் ஐந்து பேரையும், அமெரிக்க குடும்பத்திற்குள் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் ஐவரும், அமெரிக்க சட்ட திட்டங்களை பின்பற்றி, வரலாற்றை அறிந்து, மதிப்பீடுகளை உணர்ந்ததன் வாயிலாக, இந்த சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளனர்.இது எளிதானது அல்ல. உலகிலேயே, மிகப் பெரிய பொக்கிஷமாக கருதப்படுவது அமெரிக்க குடியுரிமை. இதை பெறுவது மிக கடினம். அதை எட்டிப் பிடித்ததற்கு பாராட்டுக்கள்.
இந்தியாவை சேர்ந்த சுதா, மிக திறமையான மென்பொறியாளர். கணவர் மற்றும் அழகான இரு குழந்தைகளுடன், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது சீரிய பணிக்கு என் நன்றி. அமெரிக்கர்களாக குடியுரிமை பெற்றுள்ள, ஐந்து பேருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த குடியுரிமையுடன் சேர்த்து, கடமைகளும், பொறுப்புணர்வுகளும், உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.