வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆக-31

கடந்த 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள வருமானவரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானவை முற்றிலும் தவறான தகவல் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் காலதாமதமாக வரி தாக்கல் செய்வோருக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *