உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்..!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 78. இவர் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஆகஸ்ட்-27

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன். இவருக்கு ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவரது மகன் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவரது மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் காலமானார். பின்னர் மீனாட்சி ஆச்சியின் உடல் தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடந்தது.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

இவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *