தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது..எச்.ராஜா

தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை, ஆகஸ்ட்-26

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், மொழிக் கொள்கைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தப் பார்க்கும் எதிர்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என பேசுவோர் சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் இருந்து தங்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை சமச்சீர் பள்ளிகளில் சேர்த்து விட்டுப் பேசட்டும். இல்லை என்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவுக்கு வலிமையான இடத்தில் பாஜக இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக ஆதரவை கோரி மெகபூபா ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் நிலைமை மாறும். ஒருவேளை தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தால், அது அக்கட்சியின் தலையெழுத்து. அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. போதிய கால அவகாசம் கொடுத்தும் கூட இதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?. இதற்கு மத்திய அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?. பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்யும் அலுவலர்கள் எந்த அரசுப் பணியிலும் இனிமேல் தொடர முடியாத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *