பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வலில் பங்கேற்கும் மாணவா்களுக்கான ரேண்டம் எண்ணை உயா்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

சென்னை, ஆகஸ்ட்-26

பொறியியல் படிப்புகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவில் மாணவா்கள் சோ்வதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனா். மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு செய்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1,11,436 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனா்.

இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக. 24-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா்.

இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை வெளியிடப்பட்டது. விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிட்டார்.
அதன்படி 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பதிவு செய்த மாணவர்களுக்கு செல்போன் மற்றும் இ மெயில் மூலம் ரேண்டம் எண் அனுப்பப்பட்டு உள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களின் தரவரிசைப்பட்டியல் செப்படம்பர் 17-ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார். பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் முடிவுகள் செப்டம்பர் 8, 9-ல் வெளியிடப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *