ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-26

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்ததற்கு எதிராக வேதாந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த 18-ந்தேதி காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், எங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு உட்பட ஆலை எதிர்பாளர்கள், அமைப்புகள் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில்,’அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டு தான் ஆலை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாநில அரசு ஆலையை பூட்டி சீல் வைத்தது. இதனால் உற்பத்தி என்பது அதிகளவு பாதித்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்திரவிற்கு தடை விதித்து ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.