சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.. அமைச்சர் S.P.வேலுமணி

சென்னையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது போல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-26

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:–
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் 24.8.2020 வரை 1,26,677 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,10,819 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 13,255 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவிட் நோய் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 600 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 37,883 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 20,63,107 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 1,14,619 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30.50 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், 30 எல்.இ.டி. வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது எனவும்,

இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடனும், பொதுசுகாதாரத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், 197 பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகள் குறித்தும்,

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில்சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் விடுபட்ட பணிகளுக்கான மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நிலை குறித்தும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில்அம்ரூத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும், 14வது சி.எப்.சி. 2019–-20ம் ஆண்டு 2ம் தவணைத் தொகை விடுவிப்பு திட்டப்பணிகள் நிலை குறித்தும், 15வது சி.எப்.சி. 2020–-21 தவணை விடுவிப்பு பணிகளின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் முகக்கவசம், கிருமி நாசினி திரவம் மற்றும் கைக்கழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு, தூய்மைக் காவலர்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 95,50,689 எண்ணிக்கையில் முகக் கவசங்களும், 1,58,540 லிட்டர் கிருமி நாசினியும், 1,03,556 லிட்டர் கைக்கழுவும் திரவசோப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் 2020–-21ம் ஆண்டிற்கான வங்கி கடன் இணைப்பு குறித்தும், சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் சிறப்பு கடனுதவி வழங்கும் பணியின் நிலை குறித்தும், சுயஉதவிக் குழுக்களுக்கு கொரோனாவிற்காக வங்கிகள் மூலம் சிறப்பு கடனுதவி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்தும், முதியோர் சுயஉதவிக் குழுக்களின் செயல்திட்டம் குறித்தும், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் 1 லட்சம் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு உபகரணங்களை தொடர்ந்து வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான நிலையில் உள்ளனவா என கண்காணித்து, அடைப்புகள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இந்த செயலில் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும். மேலும் அதிகாரிகளும் அவ்வப்பொழுது சென்று அனைத்து மழைநீர் கட்டமைப்புகளும் சரியான நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு அனைத்து திட்டப்பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், நகராட்சி நிர்வாக இணை ஆணையாளர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ஆர்.மனோகர் சிங் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *