தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ இயக்குநருக்கு உத்தரவு

மதுரை, அக்டோபர்-14

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வந்தது. மேலும், நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதியப்பட்டு இந்தன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி மனு கொடுத்தார். அதில், சம்பவத்தன்று, அனுமதியின்றி கூட்டம் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? என விசாரிக்க வேண்டும். போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது குறித்தெல்லாம் விசாரிக்க வேண்டும். இதற்காக கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தொடர்பாக கேள்வி எழுப்பியது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை? என கேட்ட நீதிமன்றம், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டது. அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *