நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

டெல்லி, ஆகஸ்ட்-26

திட்டமிட்டப்படி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜுலை மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு மையங்கள் 2,546ல் இருந்து 3,843 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு தேர்வு அறையில் 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஜேஇஇ தேர்வு மையங்கள் 570ல் இருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஜேஇஇ தேர்வுக்கு 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வுகளுக்கு 15.97 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில் மாநில அரசுகள் உதவ வேண்டும் என தேசிய தேர்வு முகமை கோரிக்கை விடுத்துள்ளது. தேர்வுகளை தள்ளிப்போட வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு…

*தேர்வு மையங்களில் முகக்கவசங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

*மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

*மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

*உடல்வெப்பம் அதிகமாக இருந்தாலோ அதாவது 99.4 டிகிரிக்கு அதிகமாக இருந்தாலோ, கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ மாணவர்கள் தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும்.

*தனக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மாணவர்கள் கண்காணிப்பாளர் முன்னிலையில் எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க வேண்டும்.

*தேர்வறைக்குள் நுழையும் போது கூட்டமாக செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும்.

*மாணவர்கள் தாங்கள் அணிந்து வரும் முகக்கவங்களை அகற்றி விட்டு, தேர்வு மையத்தில் வழங்கப்படும் புதிய முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.

*தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும்.

*மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும்.

*குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும்.

*50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

*மாணவர்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *