சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.. சீமான்

ஓராண்டுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதையே ஒட்டுமொத்த நிறுத்தி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-25

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்கள் இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மேலும் பாதிப்படைவார்கள். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மையிலும், வறுமையிலும் உழன்று கொண்டிருக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களைப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளும் கொடுங்கோல் நடவடிக்கையாகும்.

அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்ட பொருளாதாரத்தை மீட்டெக்க எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்காது விட்டுவிட்டு, ஊரடங்கால் ஆறுமாதகாலமாக வசூல் செய்ய முடியாத கட்டணத்தொகையினை மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சாலை வரி, வாகன வரி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுனர்களும் ஊரடங்கால் தொழில் வாய்ப்பு ஏதுமில்லாத நிலையில் தற்போதுதான் மெல்ல மெல்ல மீளத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவேயுள்ள வரிகளையே நீக்கக்கோரி அவர்கள் கோரிக்கை வைத்தும் வரும் நிலையில் சுங்கக்கட்டணம் 10% அளவுக்கு உயர்த்தப்படும் என்பது அவர்களது வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும்படுபாதகச்செயலாகும்.

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகற்கொள்ளைதான். அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் நீண்டநாள் கோரிக்கை எனும்போது, ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்குச் சுங்கக்கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்படுவது மக்கள் பணத்தைச் சூறையாடும் கோரச்செயலேயாகும். ஒரு குறிப்பிட்டப் பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு, ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை, எத்தனை வருடங்களில் அது நிறைவடைகிறது? எனும் தகவல், சாலையைப் பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு, மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அத்தகைய வெளிப்படைத்தன்மையைச் சுங்கச்சாவடிகள் கடைப்பிடிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகற்கொள்ளையாகத்தான் இருக்கும்.

சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். அதிலும் ஊரடங்கு முழுதாக நீக்கப்படாத, பொதுப்போக்குவரத்தும் தொடங்கப்படாத இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வாடகை வாகனங்களில் பணிகளுக்குச் செல்லவேண்டிய நிலையில்தான் தற்போது உள்ளனர். அத்தகைய பரிதாபகரமான நிலையிலுள்ள மக்களை ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்தேவையை மட்டும் கருத்திற்கொண்டு கசக்கிப் பிழிவது அவர்களின் குருதியை உறிஞ்சி குடிக்கும் இழிசெயலாகும்.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் விடுபட ஆண்டுக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில் இப்பேரிடர் காலக்கட்டத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தந்து உறுதுணையாக இருக்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு நேர்மாறாக ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாகச் சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காடு அளவுக்குக் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

ஆகவே, சுங்கச்சாவடிகள் எவ்விதக் கட்டண உயர்வையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டிற்குச் சுங்கக்கட்டண வசூலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாகச் சுங்கச்சாவடிக் கட்டண உயர்வை அரசு அனுமதிக்குமாயின் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *