குட்கா விவகாரம்.. திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம் ஆணை
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-25

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள், காவல்துறை உதவியோடு கடைகளில் சரளமாக விற்பனை செய்வதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக் குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ல் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக் குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தத் தடையை நீக்கக் கோரி சட்டபேரவைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டன.
2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகளில் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாட்களில் இறுதி விசாரணை நடைபெற்றது.
திமுக எம்எல்ஏக்களாக இருந்த ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்து விட்டதாகவும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திமுக தரப்பு வாதத்தையே தன் தரப்பு வாதமாகவும் ஏற்றுக்கொள்ளும்படி கு.க.செல்வம் தரப்பில் ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், திமுக எம்எல்ஏக்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.