தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம்..பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
சென்னை, ஆகஸ்ட்-25

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடினர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த விஜயகாந்த், தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார்.
இதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கொரோனா சூழலால் விஜயகாந்த் இந்தமுறை யாரையும் சந்திக்கவில்லை. அவரின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். அடுத்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக இருக்கும். அப்போது அவர் உங்கள் அனைவரையும் சந்திப்பார். தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. இப்போ வரைக்கும் கூட்டணியில்தான் இருக்கிறோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். ஆனால், தொண்டர்களின் விருப்பம் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே.
தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்மீதும் வழக்கு தொடரப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதன்முறையாக அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார்கள். அவர் உட்பட, அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை. அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். தேசியக்கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் தொடர்பான கேள்விக்கு, “அது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம். நாட்டுக்கான பிரச்னை கிடையாது. எனவே, அதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது’’ என்று பிரேமலதா பதிலளித்தார்.