மன்னிப்பு கேட்க முடியாது.. பிரசாந்த் பூஷண் உறுதியான பதில்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர மாட்டேன் என பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-24

வழக்கறிஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, ஹார்லி டேவிட்சன் பைக் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் சில கருத்துகளை வெளியிட்டார். இந்த பதிவுகள் நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த அவமதிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது.
அப்போது, தனது கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று பிரஷாந்த் பூஷண் கூறியதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இரண்டு நாள்கள் அவகாசம் வழங்கியது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பூஷண் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், எந்தவொரு மன்னிப்பும் தூண்டுதலின் பேரில் கேட்கப்படக்கூடாது மற்றும் நீதிமன்றமே கூறியது போல, அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தான் கூறிய கருத்துகள் அனைத்தும், தான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள் தான் என்றும், அந்த நம்பிக்கையை தொடருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நான் ஒரு பொய்யான மன்னிப்பைக் கேட்கும்பட்சத்தில், அது எனது மனசாட்சியையும், ஒரு நிறுவனத்தையும் அவமதிப்பதாகும் என்று பிரசாந்த் பூஷண் இன்று அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.