இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.. முதல்வர் பெருமிதம்

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-24

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் இணைய வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில் கூறியதாவது ;-

“நலமான மாநிலமே, வளமான மாநிலம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை மாணவச் செல்வங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030இல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, நாம் எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் ஒரு சரித்திர சாதனையாகும்.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது. “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா மருந்தகம்” போன்ற பல முன்னோடி திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதை பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கைகளை தானமாக பெற்று, திண்டுக்கல்லைச் சார்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது.

254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உட்பட 32,660 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் உயர் தொழில் நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேண்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக, கடந்த 8 ஆண்டுகளில் 1350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணாக்கர்களின் கனவை நனவாக்கியது அரசு. அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்தது.

அதனடிப்படையில், மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளுக்கு உடனடியாக நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *