அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.. பார்களை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, ஆகஸ்ட்-24

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், பார்களில் சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மதுபான கடைகளின் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிக அளவில் நடப்பதாகவும், அவற்றின் அருகில் விபத்துகளும் நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாகக் கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக் கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *