ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை!!
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-24

சென்னை அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 21ந்தேதி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது தான் என்கவுண்டர் நடந்துள்ளது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.