தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா ?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, ஆகஸ்ட்-24

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாநிலத்துக்குள்ளும், மாநிலத்துக்கு வெளியேயும் பயணம் மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திருமணம், இறப்பு, அரசு ஒப்பந்தப் பணிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள இணைய வழியில் (இ-பாஸ்) அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் இணைய வழி அனுமதி சீட்டு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால், பொதுமக்கள் தங்களது பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் இணையவழி அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறைகளில் வெகுவாக தளா்வுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இணையவழி அனுமதி சீட்டு முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் இணையவழி அனுமதி சீட்டு தொடா்பாக மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், ‘மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்துக்குத் தடை விதிக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு காரணமாக, புதுச்சேரியில் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இணையவழி அனுமதி சீட்டு முறை தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா ? வேண்டாமா? என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் இணையவழி அனுமதி சீட்டு தொடா்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.

இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்வது சவாலானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *