தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் சோனியா காந்தி.. கூடுகிறது செயற்குழு
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-23

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்தது. மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசின் சில தலைவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சோனியாவுக்கு, காங்., கட்சியின் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர் கடிதம் எழுதியுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியினர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள சோனியா, அனைவரும் கூட்டாக புதிய தலைவரை தேர்வு செய்வோம் எனவும் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளிக்கையில், “சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என தெரிவித்தார்.