பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சி – கோவை மாநகராட்சி அறிவிப்பு

பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு துலிப் (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் முன்மாதிரியானத் திட்டத்தை நாட்டிலுள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டியாக தேர்வான நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்கான இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் (ஸ்மார்ட் சிட்டி) பயிற்சி வாய்ப்புகளை தொடங்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் இலக்குடன் கோவை மாநகராட்சி துலிப் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை உதவித் தொகையுடன் அளிக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக கோவை மாநகராட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற வசதிகள் உள்ளிட்ட 8 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ 10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல் பொது சுகாதாரம், புள்ளியியல் ஆய்வு , மக்கள் தொகை கணக் கெடுப்பு, நகராட்சி நிதி நிர்வாகம் 4 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ7,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான மின்னஞ்சல் முகவரியையும் கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் சீரமைக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை துலிப் தளம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கும், தேசிய வாழ்வியல் தொழிற்பயிற்சி முறை திட்டம் துவங்கப்படவுள்ளது. இதில் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு உதவியாளர், குழாய் பொருத்துனர், எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.chennaicorporation.gov.in அல்லது gccapp.chennaicorporation.gov.in/cciti/ ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சி வாய்ப்புகளை விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தி, முன்னேற வேண்டுமென தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *