அதிமுகவை 100% வெற்றி பெறச்செய்ய தொண்டர்களின் கடுமையான உழைப்பு தேவை.. அமைச்சர் S.P.வேலுமணி

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை, ஆகஸ்ட்-22

கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மற்றும் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இதயதெய்வம் மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தந்து மக்கள் அரசாக தமிழக அரசு உள்ளது. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற இளைஞர், இளம் பெண்கள் பாசறை மிகவும் உதவியாக இருந்தது. தற்போது பூத் கமிட்டிக்கு உறுதுணையாக இருக்கும் சார்பு அணிகளுக்கு பாசறை நிர்வாகிகள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாம் எந்த திட்டம் கேட்டாலும் கொடுக்கிறார். எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத அளவுக்கு அதிக திட்டங்களை கோவை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். கோவை மாவட்டத்தில் 4 கல்லூரிகள் தொடங் கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மிக நீளமான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. கோவையில் மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் திட்டம், அத்திக்கடவு -அவினாசி திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், நொய்யல் ஆறு புனரமைப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எந்த திட்டம் கொண்டு வந்தாலும் குறை சொல்பவர்களை கண்டு நாங்கள் பயப்பட போவது இல்லை.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசு நிறைவேற்றிய எண்ணற்ற திட்டங்களை தொண்டர்கள் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லி அ.தி.மு.க. வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். அனைத்து குடும்பங்களிலும் ஏதாவது ஒரு அ.தி.மு.க. அரசின் திட்டம் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததுபோல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற முடியும். நாடாளுமன்ற தேர்தலை போன்று தி.மு.க. வினர் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. எனவே கோவை, நீலகிரி மாவட்டங்களில் அனைவரும் ஒற்றுமையாக, உணர்வோடு தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பூத் கமிட்டிக்கு உறுதுணையாக இருக்கும் சார்பு அணி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *