ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியதை திரும்பப் பெறமாட்டேன் – சீமான் திட்டவட்டம்

சென்னை, அக்டோபர்-14

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்ட போது, நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு மாற்றி எழுதப்படும் என்று பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தது. காங்கிரசார் சிலர் போராட்டமும் நடத்தினர். இதன் விளைவாக, சீமான் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என 25 வருடமாக நான் பேசிவருகிறேன், காங்கிரசின் போராட்டத்திற்கு நான் அஞ்சப்போவதில்லை, இதுபோன்ற பல வழக்குகளை நாம் எதிர்க்கொண்டுள்ளேன், இந்த வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன், தாம் பேசியதை திரும்பப்பெற போவதில்லை என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி நான் பேசினேன் என கூறுவதை ஏற்கமுடியாது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 28 ஆண்டுகளாக சிறையில் வாட்டி வதைக்கிறார்கள். பிரபாகரன் படத்தை நெஞ்சிலும், தோளிலும் பச்சைக் குத்திக்கொண்டு நாங்கள் சட்டப்பேரவைக்குள் நுழையும் நாள் கண்டிப்பாக வரும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *