முகூர்த்த தினம், விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ மற்றும் பழங்களின் விலை உயர்வு

முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளது.

சென்னை, ஆக-31

நாடு முழுவதும் வரும் திங்களன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது. வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கு விலை உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது. தக்காளி மட்டும் விலை குறைந்துள்ளது. நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.20-க்கும் நவீன் தக்காளி ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.90-க்கு விலை உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு 20 ரூபாயில் இருந்து ரூ.30-க்கும், முள்ளங்கி, பீட்ரூட் ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது. சவ்சவ் கிலோ ரூ.50, பாகற்காய் ரூ.60, வாழைத்தண்டு ரூ.50-க்கும், விற்கப்படுகிறது.

இதை தொடர்ந்து பழங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொய்யாப்பழம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.80-க்கு உயர்ந்துள்ளது. ஆப்பிள் கிலோ ரூ.120, ராயல் கலா ஆப்பிள் ரூ.320, வாஷிங்டன் ஆப்பிள் ரூ.250, சாத்துக்குடி ரூ.60, மாதுளம் ரூ.120, பெரிய மாதுளம் பழம் கிலோ ரூ.180, பூவன் வாழைப்பழம் ரூ.50-க்கு விற்பனையாகிறது. பேரிக்காய் ரூ.100, வெளிநாட்டு பேரிக்காய் ரூ.280-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், கனகாம்பரம், முல்லை 300 கிராம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ 300 கிராம் 150 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. வீதிகளில் ஒரு முழம் பூ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். சாமந்தி, ரோஸ் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.120-க்கு விலை உயர்ந்து விட்டது. முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் பண்டிகை முடிந்த பிறகு, செவ்வாய்க்கிழமைக்கு பிறகு விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *