தமிழகத்தில் தூய்மை நகரங்கள் பட்டியலில் கோவைக்கு முதலிடம்..!

கோவை, ஆகஸ்ட்-22

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், ‘துாய்மை பாரதம்’ இயக்ககம் துவக்கப்பட்டது. சேவை, தொழில்நுட்ப பயன்பாடு, மக்கள் கருத்து மற்றும் கள ஆய்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், துாய்மை நகரங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு, ‘ரேங்க்’ வழங்கப்படுகிறது.நாடு முழுவதும் இந்த ஆண்டு, 4,242 நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் 20.08.2020 அன்று நடைபெற்றது.குப்பை இல்லாத நகரங்களுக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. ரேங்க் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய அளவில், நான்காவது ஆண்டாக தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரம் முதலிடத்தையும், குஜராத்தின் சூரத் நகர் இரண்டாமிடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாமிடத்தையும் பிடித்தன. இவ்வரிசையில், 6,000க்கு, 2,337.11 மதிப்பெண் எடுத்து, கோவை மாநகராட்சி, 40வது ‘ரேங்க்’ பெற்றது. தமிழக அளவில் முதலிடம் பெற்றது. இதேபோல் மதுரை இரண்டாமிடமும், சென்னை மூன்றாமிடமும் பெற்றன. தமிழக அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாநகராட்சிக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில்,10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் துாய்மை நகரங்கள் தர வரிசை பட்டியலில் கோவை மாநகராட்சி தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது மிகவும் பெருமையளிக்கிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

கோவையை குப்பையில்லா நகரமாக மாற்ற பல்வேறு முயற்சிகளுடன் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் கோவை மாநகராட்சி, இதே உத்வேகத்துடன் செயல்பட்டு அடுத்தாண்டு தேசிய அளவில் முதலிடம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *