கேரள தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம், ஆகஸ்ட்-21

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கருப்பு பணம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தங்க கடத்தலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஸ்வப்னாவுடன் சிவசங்கரின் தொடர்பு குறித்த தகவல்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோரின் விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனு மீது எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்தது கருப்பு பணம் என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *