காவலரை வெட்டியதால் தற்காப்புக்காக ரவுடி சங்கர் சுட்டுக்கொலை.. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-21

சென்னை அயனாவரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான ரவுடி சங்கர் நியூ ஆவடி சாலையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் 4 காவலர்கள் சங்கரை கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் கைது செய்ய முற்படும் போது ரவுடி சங்கர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் முபராக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் நடராஜ் ரவுடி சங்கரை 3 முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் முபராக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் காயமடைந்த காவலர் முபராக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர் மீது 3 கொலை வழக்குகள்,4 கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,ஏற்கெனவே சங்கர் 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். காவலர் முபராக்கை ரவுடி சங்கர் வெட்டியதால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த என்கவுட்டர் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு பிறகே அறிக்கை வெளிவரும் என அவர் கூறினார். இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *