தமிழகத்தில் 2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி, ஆகஸ்ட்-20

தருமபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ரூ.450 கோடியில் செயல்படுத்த மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தி 3ஆவது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது. போலியான விண்ணப்பம் தயாரித்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நோய் தடுப்புக்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்க்க குறைதீர் முகாம் நடத்துகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்படுத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 4,111 மகளிருக்கு ரூ.10.2 கோடியில் இருசக்கர வாகன மானியம் வழங்கப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில் நுண்ணுயிர் பாசன திட்டத்திற்கு ரூ.95.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை விவசாயிகளை மேம்பட்டுத்த விலையில்லா ஆடு, மாடுகள், கோழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையை 4 வழித்தடமாக மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமைச்சர் அன்பழகன் வேண்டுகோளை ஏற்று தருமபுரியில் சட்டக்கல்லூரி கட்டுவதற்கான பணிகள் நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *