தடையை மீறி விநாயகர் சிலைகளை நிறுவும் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.. எல்.முருகன்
சென்னை, ஆகஸ்ட்-20

தமிழகத்தில் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுப்பது புரியாத புதிர் ஆக உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை விட மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கவில்லை, பொது இடங்களில் வைத்து வழிபடவே அனுமதி கேட்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணியின் நிலைப்பாடு என்னவோ அதுவே பாஜகவின் நிலைப்பாடு என்றும் எல்.முருகன் தெரிவித்தார். இ-பாஸ் விதிகளை மத்திய அரசு தளர்த்திய நிலையில் தமிழக அரசு மட்டும் நீட்டித்துள்ளது ஏன்? என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.