கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் உள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி
வேலூர், ஆகஸ்ட்-20

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதில், தமிழக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் நடைமுறையை அரசு எளிமையாக்கி உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் பயன்படுத்த வேண்டும். மிக மிக அவசியம் என்றால் மட்டும் மக்கள் இ-பாஸ் எடுத்து வெளியூர் செல்லலாம். கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும். பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கொரேனா பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தேவைப்படும் இடங்களில் நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிமராமத்து பணிகளால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கிறது என்றார்.