வயலில் இறங்கி உழவு செய்த எம்எல்ஏ… துணை ஜனாதிபதி, முதல்வர் பாராட்டு

வயலில் இறங்கி உழவு பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புவனேஸ்வர், ஆகஸ்ட்-20

ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நபராங்காபூர் மாவட்டம், தபுகாவூன் தொகுதியின் பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், மனோகர் ரந்தாரி. சமீபத்தில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து மாநிலத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், எம்.எல்.ஏ., மனோகர் ரந்தாரி, தனக்கு சொந்தமான, 25 ஏக்கர் பண்ணை நிலத்தில், கடந்த சில நாட்களாக தானே உழவு செய்து வருகிறார். இவருடைய மனைவி, அரசு ஊழியராக பணியாற்றுகிறார். தினமும் காலை 5 மணிக்கு மனைவியுடன், வயலுக்கு வந்து விடுகிறார். காலை, 10 மணி வரை, மனைவியுடன் சேர்ந்து வயலில் உழவு பணிகளை மேற்கொள்கிறார். இதன்பின் மனைவி அலுவலகத்துக்கு செல்கிறார். எம்.எல்,ஏ., மட்டும் மதியம் 12 மணி வரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்புகிறார். நிலத்தில் தானே உழவு செய்யும் எம்.எல்.ஏ., ரந்தாரியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து ரந்தாரி கூறுகையில், சிறு வயதிலிருந்தே விவசாய பணிகளை செய்து வருகிறேன். எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பே, எனது நிலத்தில் தானே உழுது வந்தேன். எனக்கு தொழில் விவசாயம் தான். ஆண்டுதோறும், நெல் மற்றும் சோளம் பயிரிடுவதன் மூலம், 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. விவசாயம் வளர்ச்சியடைந்தால் தான் நாட்டில் பட்டினி குறையும். விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *