மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு.. தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் சோ்வதற்கு ஒரே பொதுத் தோ்வு நடத்துவதற்கு ‘தேசிய பணியாளா் நியமன தோ்வு முகமை’ என்ற அமைப்பை ரூ.1,517 கோடியில் புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-20

பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதி தேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மதிப்பெண் அடிப்படையில், மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும்.இந்த தகுதி தேர்வு நடத்துவதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) அமைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கூட்டம் முடிவடைந்த பிறகு, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. வேலை தேடுபவர்கள் பொதுவான ஒரே தகுதி தேர்வு எழுதினால் போதும். இதனால், எண்ணற்ற தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் பண செலவையும், நேர விரயத்தையும் மிச்சப்படுத்தலாம்.

பல ஆண்டுகளாக, இளைஞர்கள் இந்த கோரிக்கையை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான, முக்கியமான சீர்திருத்தம். ஆள் தேர்வை இலகுவாக்குவதுடன், சமூகத்தின் நலிந்த பிரிவினராக கருதப்படுபவர்களின் வாழ்க்கையையும் இலகுவாக்கும். மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதற்காக பெண்களும், ஏழைகளும் நீண்ட தூரம்பயணிப்பதையும் இந்த முடிவு தவிர்க்கும். இதனால், கோடிக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி (தொழில்நுட்பம் சாராதது) பணியிடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை, பொது தகுதி தேர்வை நடத்தும்.

இதில் பெறும் மதிப்பெண்களை, தற்போதைக்கு ரெயில்வே, வங்கி உள்ளிட்ட 3 பெரிய தேர்வாணையங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும். அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதை பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில், மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் இந்த மதிப்பெண் பகிர்ந்து கொள்ளப்படும். அதன்மூலம், அந்த தேர்வாணையங்களுக்கு செலவும், நேரமும் மிச்சமாகும்.

தேசிய பணியாளர் தேர்வு முகமையின் தலைமையகம் டெல்லியில் செயல்படும். அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர், அதன் தலைவராக செயல்படுவார்.

ரெயில்வே, நிதி அமைச்சகங்கள், பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே பணியாளர் தேர்வாணையம், வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் அதில் இடம்பெறுவார்கள்.

இந்த முகமை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,517 கோடியே 57 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இத்தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும். 117 தேர்வு மாவட்டங்களில், தேர்வு கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்தொகை பயன்படுத்தப்படும்.

தகுதி தேர்வு நடத்துவதற்கு, முதல்கட்டமாக, நாடு முழுவதும் ஆயிரம் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மையம் இருப்பது உறுதி செய்யப்படும்.

இதன்மூலம் எந்த விண்ணப்பதாரரும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டி இருக்காது.

இந்த தகவல்கள், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

தேசிய வேலைவாய்ப்பு முகமை குறித்து பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பதிவில், ‘தேசிய வேலைவாய்ப்பு முகமை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பொதுவான தகுதித்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் பல சோதனைகளை அகற்றி, விலைமதிப்பற்ற நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும் இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *