6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படாது.. தமிழக அரசு

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்காத ஓய்வூதியதாரர்களின் பணம் நிறுத்தப்படமாட்டாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-20

பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கரூவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி, 6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல. 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என கூறியுள்ளார்.

கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி, அனைத்து கருவூல ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களும், ஓய்வூதியர்களும் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காதது பற்றி தெரிவித்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அவர்களுக்கு குறிப்பாக முதியோர் வெளியே செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஓய்வூதியர்கள் தங்களின் வங்கி கணக்கை இயக்க முடியாமல் போய்விட்டது. எனவே கொரோனா பரவல் காரணங்களுக்காக, கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம். இதுகுறித்த தகுந்த அறிவுரைகளை சார் கருவூலம் உள்பட அனைத்து கீழ்நிலை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *