கோவை மாணவி சுபஸ்ரீ மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்… மு.க.ஸ்டாலின்

கோவை மாணவி சுபஸ்ரீயின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்று பதில் சொல்லியாக வேண்டும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-20

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஊழியரான ரவிச்சந்திரன் என்பவரின் மகள் 19 வயதான சுபஸ்ரீ, இவர் நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்தாண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவப் பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்தார்.

கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனால் சுபஸ்ரீ மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு குறித்த அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை என்றும் சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். மேலும் இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் மாநில அரசு கைகட்டிக் கிடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *